Header Ads

பள்ளி மாணவிகள் 5 பேருக்கு பாலியல் தொல்லை: மாணவன் - சிறுவர்கள் கைது..

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு அரசு நடுநிலைப் பள்ளியில் ஆரம்ப சுகாதார மைய குழுவினர் மருத்துவ முகாம் நடத்தினர்.

அப்போது பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 6 முதல் 9 வயதுடைய மாணவிகள் 5 பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட பள்ளிக்கு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரித்தனர்.

இதில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவர்கள் 3 பேர் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், கற்பகம் ஆகியோர் நேரில் சென்று மாணவிகளை பரிசோதனை செய்த டாக்டர், பள்ளி தலைமை ஆசிரியை ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 சிறுவர்களை பிடித்தனர். அதில் ஒரு சிறுவன் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். மற்ற 2 பேரும் தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இதை தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்களையும் கைது செய்து, கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் சமீப காலமாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டத்தின் கீழ் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் 12 வழக்குகள் பதிவாகி உள்ளது.

2018-ம் ஆண்டில் ஜனவரி முதல் இதுவரை மாநகர போலீஸ் நிலையங்களில் 9 வழக்குகளும், மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் 5 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

முன்பு பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டால் அவர்களது குடும்பத்தினர் புகார் கொடுக்க முன் வர மாட்டார்கள். சமீப காலமாக போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு காரணமாக, புகார் வந்ததும் வழக்குபதிவு செய்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சியில் பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்திலும் அவர்களது குடும்பத்தினர் புகார் கொடுக்க மறுத்து விட்டனர். நாங்கள் தான் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மூலமாக புகாரை பெற்று வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.