Header Ads

கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற, தொலைதூரம் வந்து ரத்ததானம் அளித்த வாலிபர்..

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மைதிலி என்ற பெண் தனது 2-வது பிரசவத்துக்காக சென்னையில் எழும்பூரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்து இருந்தது. அப்போது இவரது ரத்தத்தை பரிசோதனை செய்த போது அவருக்கு எச்.எச். என்ற வகையை சேர்ந்த ரத்த பிரிவு இருந்தது தெரிய வந்தது.

பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு ஏ, பி, ஓ, ஏபி. ஆகிய பிரிவுகளில் ரத்தம் இருக்கும்.

ஆனால் எச்.எச். பிரிவு ரத்தம் இருப்பது அரிதானது. எனவே, முதல் பிரசவத்தின் போதே அவருக்கு பிரசவ கால சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கருதப்பட்டது. ஆனாலும் அப்போது அவருக்கு நல்லபடியாக பிரசவம் முடிந்தது.

இதனால் அடுத்த தடவை கர்ப்பம் ஏற்பட்டு பிரசவத்துக்கு வந்தால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் இருக்கும் என்று டாக்டர்கள் கூறினார்கள்.

இதற்காக பிரசவ இறுதி தேதிக்கு சில நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரிக்கு வந்து ரத்தம் அளிக்க வேண்டும். அதை சேமித்து வைத்து பிரசவ நேரத்தில் பயன்படுத்தி கொள்ளலாம் என்று டாக்டர்கள் கூறி இருந்தனர்.

இந்த நிலையில் மைதிலி மீண்டும் கர்ப்பம் ஆனார். ஆனால் டாக்டர்கள் கூறியபடி முன்கூட்டியே ரத்தம் அளிக்க ஆஸ்பத்திரிக்கு வரவில்லை. பிரசவ காலம் நெருங்கியதும் எழும்பூர் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

அவருக்கு ரத்தம் செலுத்திதான் பிரசவம் பார்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இவருக்குரிய எச்.எச். ரத்தம் மும்பை ரத்ததான கிளப்பில் பதிவு செய்தவர்களிடம் இருந்தது. அங்கிருந்து ரத்தத்தை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில் எச்.எச். ரத்தம் தேவைப்படுவது குறித்து பல்வேறு ரத்த குழுக்களுக்கு செய்தி அனுப்பப்பட்டது. இதை பெங்களூரில் நிதி நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலை பார்க்கும் ஆதித்யா ஹெக்டே (வயது 33) என்பவருக்கு எச்.எச். பிரிவு ரத்தம் இருந்தது.

அவர் இந்த செய்தியை பார்த்து விட்டு ரத்தம் அளிக்க முன்வந்தார். பெங்களூரில் இருந்து ரெயிலில் சென்னை வந்து மைதிலிக்கு ரத்த தானம் வழங்கினார். அதை வைத்து சிகிச்சை அளித்தனர். நல்லபடியாக பிரசவம் முடிந்தது. அதன் பிறகு ஆதித்யா ஹெக்டே பெங்களூர் திரும்பி சென்றார்.

ஒரு பெண்ணை காப்பாற்றுவதற்காக பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து ரத்ததானம் அளித்தது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

இதுபற்றி ஆதித்யா ஹெக்டே கூறும் போது, நான் இதுவரை 55 தடவை ரத்ததானம் செய்து இருக்கிறேன். எனது ரத்தம் அரிய வகையை சேர்ந்தது என்பதால் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு கூட எனது ரத்தத்தை எடுத்து பார்சல் மூலம் அனுப்பி இருக்கிறார்கள்.

மலேசியா, பாகிஸ்தான், இலங்கை நபர்களுக்கு இவ்வாறு அனுப்பப்பட்டு உள்ளது. மைதிலிக்கு உடனடியாக ரத்தம் தேவைப்பட்டதால் நான் பெங்களூரில் இருந்து ரெயிலில் வந்து ரத்த தானம் வழங்கினேன் என்று கூறினார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.