பெறா மகளைக் கொன்ற சித்தி.. பதற வைக்கும் பின்னணிக் காரணம்..
தர்மபுரியை அடுத்த சோளக்கொட்டாய் அருகே உள்ள கெங்கான்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி கூலித் தொழிலாளி. இவரது முதல் மனைவி ஜான்சிராணி (வயது24). இவர்களுக்கு 4 வயதில் சுமத்ரா என்ற மகள் இருந்தாள். சுமத்ராவை அவரது தாத்தா சின்னசாமி வளர்த்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு ஜான்சிராணி பிரிந்து சென்று விட்டார். எப்போதாவது அவர் குழந்தையை பார்க்க கணவர் வீட்டுக்கு வருவார். ஆனால் கணவருடன் பேச்சு வார்த்தை கிடையாது.
இந்த நிலையில் சின்னசாமி கணவரை பிரிந்து வாழ்ந்த வசந்தா (27) என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 17-ந்தேதி சிறுமி சுமத்ராவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதாக கூறி வசந்தா தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது என்றாலும் சிகிச்சை பலனின்றி சிறுமி சுமத்ரா இறந்து போனார்.
இந்த தகவலை அறிந்த ஜான்சிராணி தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக மதிகோன்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மர்மசாவு (174) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார்.
இறந்துபோன சிறுமி சுமத்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அந்த சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானது. டாக்டரும் இதை உறுதிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து மர்மசாவு பிரிவின் கீழ் தொடரப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் விசாரணை நடத்தி சிறுமியை கொன்ற அவரது சித்தி வசந்தாவை கைது செய்தார். அப்போது அவரிடம் சிறுமியை கொன்றது ஏன்? என்று வசந்தாவிடம் விசாரித்தார். சொத்து கிடைக்காமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டதால் சிறுமியை கொன்றதாக அவர் கூறினார்.
இது குறித்து அவர் போலீஸ் விசாரணையின் போது கூறியதாவது:-
எனது கணவர் சின்னசாமிக்கும், அவரது முதல் மனைவி ஜான்சிராணிக்கும் பிறந்த மகளை எனது கணவரின் தந்தையான எனது மாமனார் சின்னத்துரை வளர்த்து வந்தார்.
நான் கணவரை பிரிந்து வந்து சின்னசாமியை 2-வது திருமணம் செய்தேன். எனக்கு சொத்தை பிரித்து தரும்படி மாமனார் சின்னதுரையிடம் கேட்டேன். அவர் மறுத்து விட்டார்.
சொத்துக்கள் அனைத்திற்கும் வாரிசு சுமத்ராதான் என்றும், நீ என் மகனின் இரண்டாவது மனைவிதானே என்றும் மாமனார் என்னை கேலியாக பேசினார். இதனால் சொத்துக்கு வாரிசான சிறுமியை கொன்று விட்டால் எனக்கு சொத்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறுமியை கழுத்தை நெரித்து கொன்று விட்டேன்.
பின்னர் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆஸ்பத்திரியில் சேர்த்து நாடகம் ஆடினேன். ஆனால் போலீசாரும், டாக்டரும் உண்மையை கண்டுபிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியதாக தெரிகிறது.
கைதான வசந்தாவை போலீசார் தர்மபுரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்