மக்கள் மத்தியில், 10 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த சீனா..!
சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஒரு சர்ச்சைக்குரிய வழக்கில் மைதானம் ஒன்றில் வைத்து ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் 10 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் குவாங்டாங் பகுதியில் உள்ள லுபெங் என்ற நகரில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 10 பேரை பொதுமக்கள் முன்னிலையில் வைத்து தீர்ப்பளிக்க நீதிபதி முடிவெடுத்தார். பின்னர் அந்த பகுதி மக்களுக்கு இதுகுறித்து சமூக வலைதளங்கள் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது. அங்குள்ள மைதானத்தில் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப் படவுள்ளதாக செய்தி பரவியதை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் கூடினர்.
இதனை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட 10 பேரை பொலிஸ் அங்கு அழைத்து வந்த நிலையில் பொதுமக்கள் முன்னிலையில் நீதிபதி அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பின்னர் அவர்களை அங்கிருந்து கொண்டு சென்று உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மேல் விசாரணை நடந்த போது பொதுமக்கள் கைத்தொலைபேசிகளில் படம்பிடித்துக் கொண்டும் சிகரெட் பிடித்துக் கொண்டும் அங்கு வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் பள்ளிச் சிறுவர்களும் சீருடையுடன் அங்கு நின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேபோல் பொதுவாக தண்டனை வழங்குவது சீனாவில் புதிதல்ல. முதலாம் உலகப் போர் காலத்திலேயே இதேபோல் தண்டனை வழங்கப்படும் வழக்கம் இருந்துள்ளது.
அண்மையில் கூட சீனாவில் உள்ள நீதித்துறை மீது சர்வதேச அளவில் பல சர்ச்சைகள் எழுந்தது. 99 விகிதமான வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், உலகிலேயே அதிக மரண தண்டனை விதிக்கும் நாடும் சீனா தான் என அந்நாட்டு மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்