Header Ads

மக்களின் பலவீனமே...பேஸ்புக்கின் பலம்: பேஸ்புக் மாஜி தலைவரின் கருத்தால் சர்ச்சை..!

சான் பிரான்சிஸ்கோ : மக்களின் உளவியல் பாதிப்புகளை அடிப்படையாக கொண்ட பிரச்னைகளை (பலவீனங்கள்) கொண்டே பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் இயங்கி வருவதாக பேஸ்புக் முன்னாள் தலைவர் ஷியான் பார்கர் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் ஷியான் பார்கர் சிறப்புரையாற்றினார். அதில் அவரின் ஒவ்வொரு கருத்தும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை மணி அடிப்பதுபோன்றே இருந்தது.
ஷியான் பார்கர், அந்த கருத்தரங்கில் பேசியதாவது: பேஸ்புக் உள்ளிட்ட மற்ற சமூக வலைதளங்கள் அனைத்தும், மக்களின் பலவீனங்களை (உளவியல் பாதிப்புகள்) கட்டமைப்பாக கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினர் என்று அல்லாமல், தற்போது பள்ளி செல்லும் குழந்தைகளிடையேயும் சமூகவலைதளங்கள் மீதான மோகம் அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, வருங்காலங்களின் அவர்களிடையே ஏற்படும் மாற்றங்கள் குறித்த முடிவை, கடவுள் மட்டுமே அறிவார்.

மக்களின் உளவியல் பாதிப்புகளை மையப்பொருளாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சமூகவலைதளங்களில் பேஸ்புக் முதல் இடத்தை பெறுகிறது. நாம் எவ்வளவு நேரம் பேஸ்புக்கில் செலவிடுகிறோம், அதில் நாம் காட்டும் அர்ப்பணிப்பு உள்ளிட்டவைகளை கணக்கிட்டாலே நமக்கு இது விளங்கும்.
நாம் தெரிவித்த கருத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும்போது நம்முள் டோபமைன் சுரப்பதுபோல, பேஸ்புக்கில் போடப்படும் பதிவுகளுக்கு அதிக லைக்குள் மற்றும் கமெண்ட்டுகள் வரும்போது, நாம் அதில் அதிகநேரத்தை செலவிட துணிகிறோம். பேஸ்புக்கை, நான் "சமூக சரிபார்ப்பு கருத்து சுழற்சி (a social-validation feedback loop") என்றே அழைக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இசை பகிர்வு இணையதளமான நாப்ஸ்டெர் துணை நிறுவனரான ஷியான் பார்க்கர், பின் பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரானார். பேஸ்புக்கில், இவரது பங்கு குறுகிய கால அளவினதாகவே இருந்தது. 2006ம் ஆண்டில், இவரது வீட்டிலிருந்து போலீசார் கோகைன் போதை பொருளை பறிமுதல் செய்ததையடுத்து, 2006ம் ஆண்டில், பேஸ்புக் நிர்வாகம், தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியதை தொடர்ந்து, அவர் பேஸ்புக் குடும்பத்திலிருந்து விலகினார்.

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தல், அந்த தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு மற்றும் பேக் நியூஸ் ("fake news") உள்ளிட்டவைகள் அந்தநேரத்தில், சமூகவலைதளங்களில் முக்கியமான விவாதப்பொருளாக இருந்ததை யாராலும் மறக்கவோ,மறுத்திடவோ முடியாது, அந்தளவிற்கு, நமது சமூகத்தில், சமூகவலைதளங்கள் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.