விக்னேஸ்வரனையும், வீரவன்சவையும் கடலில் தள்ளவேண்டும்; ஐ.தே.க சீற்றம்..

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தெற்கில் வீரவன்ச போன்ற இனவாதிகளை ஒன்றாக சேர்த்துக் கட்டி, நடுக்கடலில் தள்ளிவிட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.
புதிய அரசியலமைப்பை வேண்டாம் என்று கூறிய தெற்கு சிங்கள மக்கள் இன்று அதனை வரவேற்பதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார, இனவாதிகளின் செயற்பாடுகளால்தான் புதிய அரசியலமைப்பை மக்கள் எதிர்த்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு கோட்டையிலுள்ள கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இன்றைய தினம் பகல் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார, பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கல், அதிகாரங்களைப் பகிர்தல் போன்ற விவகாரங்களுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவை வெளியிட்டிருப்பதாகக் கூறினார்.
“நாட்டைப் பிரிக்கவா புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக கைகளை உயர்த்தப் போகின்றீர்கள் என எம்மிடம் கேள்விகேட்ட எமது கிராமத்திலுள்ள மக்கள், இன்று உத்தேச புதிய அரசியலமைப்பு மிகவும் சிறந்ததொன்று என்கின்றனர். ஒருமித்த நாடு என்ற வகையிலும் அதிகாரங்களைப் பகிரவும், பௌத்த மதத்திற்குரிய முன்னுரிமையை அப்படியே பாதுகாக்கவும் ஏனைய கட்சிகளும் தயாராக இருக்கின்றன.
அதனால் வடக்கிலுள்ள விக்னேஸ்வரன் போன்ற இனவாதிகளும், தெற்கிலுள்ள வீரவன்ச போன்ற இனவாதிகளும் இன்று ஒருமூலைக்கு முடங்கியுள்ளனர். இந்த நிலையில் வடக்கிலும், தெற்கிலும் மூலையில் ஒதுங்கியிருக்கும் இனவாதிகளை சேர்த்துக்கட்டி நடுக்கடலில் தள்ளவேண்டும். வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி, இனவாதிகள் இனவாதிகளாகும். கடந்தவாரம் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தின்போது இனவாதிகளுக்கு சிறந்த பதிலடி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
இதேவேளை ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் இன்றைய தினமும் பல பகுதிகளிலும் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவிவருகின்றது.
இந்த எரிபொருள் தட்டுப்பாட்டிற்குப் பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகாக்களின் சதி செயற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார, இதற்குப் பின்னால் இருப்பவர்களது தகவல்களை இன்னும் ஒரே வாரத்தில் அம்பலப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
“இன்னும் இரண்டு மாதங்களில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை இலக்குவைத்து, மக்கள் மத்தியில் இந்த அரசாங்கத்தை கஷ்டத்திற்கு உள்ளாக்கும் சூழ்ச்சி ஒன்று இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எமக்குள் எழுந்துள்ளது.
எனவே அது யார் என்பதை விரைவில் அம்பலப்படுத்த வேண்டும். இந்த பெற்றோல் தட்டுப்பாட்டை ஏற்படுத்த பின்னால் இருந்து செயற்பட்டவர்கள் யார், அதற்கு ஆலோசனை, உதவிகளை வழங்கியது யார் என்ற தகவல்களை இன்னும் ஒருவாரத்தில் அம்பலப்படுத்தவும் முடியும்” என்று தெரிவித்தார்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்