விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி ஏமாறும், சிங்கள இராணுவ படைத்தரப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேராவில் தேக்கங்காடு பகுதியில் அமைந்துள்ள 683 ஆவது படத்தலைமையக வளாகத்தில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாகத் தெரிவித்து அகழ்வு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கமைய இடம்பெற்ற குறித்த அகழ்வு நடவடிக்கை நேற்றைய தினம் ஆயுதங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் முடிவுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த படத்தலைமையக வளாகத்தில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அதனை தேடுவதற்காக நீதிமன்ற அனுமதி பெறப்பட்டிருந்தது. அதற்கமைய நேற்று மாலை 4 மணியளவில் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி எஸ் எம் எஸ் சம்சுதீன் முன்னிலையில் குறித்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனாலும் குறித்த அகழ்வு நடவடிக்கையின்போது எந்தவொரு ஆயுதப் பொருட்களும் படையினரிடம் சிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பகுதியில் நடைபெற்ற அகழ்வு நடவடிக்கையின்போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்