தோற்றத்தை மாற்றி கடைகளில் கொள்ளையடித்த, நூதன திருடன்..

சென்னை அடுத்த திருமுல்லைவாயிலில் தோற்றத்தை மாற்றி டெம்போ வேனில் சென்று கடைகளில் நூதன முறையில் கொள்ளையடிக்கும் ஆசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர். கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட வேனையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயில் விவேகானந்தா பள்ளி எதிரில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமாக அவ்வழியாக வந்த டெம்போ வேனை வழிமறித்து போலீஸார் சோதனை செய்தனர். அப்போது வேனில் இருந்த கடப்பாறை, கத்தி, சுத்தியல் போன்ற ஆயுதங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து டெம்போ வேன் ஓட்டுநர் சையத் சர்ப்ராஸ் நவாஸிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த 30-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்கில் தேடப்பட்ட திருடன் என்பது தெரிய வந்தது.
7 முறை குண்டர் தடுப்பு காவலில் சிறையிலடைக்கப்பட்ட கொள்ளையன் சர்ப்ராஸ் நவாஸ், சிறையில் இருந்து வெளியில் வந்ததும் தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டு நூதன கொள்ளையில் இறங்கி விடுவது வழக்கம். இம்முறை வெளியில் வந்த கொள்ளையன் முதலில் டெம்போ ஒன்றை திருடி நூதன கொள்ளையில் இறங்கியுள்ளான்.
அதாவது பகல் நேரத்தில் டெம்போவில் சென்று சிசிடிவி கேமரா இல்லாத பகுதி எது? எந்த கடைகளில் கொள்ளையடிக்கலாம் என திட்டம் போட்டு, பின்னர் நள்ளிரவு கடந்ததும் அந்த பகுதிக்கு வருவான். தான் கொள்ளையடிக்கும் கடை முன்பு டெம்போ வேனை யாருக்கும் சந்தேகம் வராமல் நிறுத்திவிட்டு கடைகளில் பூட்டை உடைத்து பொருட்களையெல்லாம் டெம்போவில் வைத்து கொண்டு சென்றுவிடுவது இந்த முறைக்கான கொள்ளை தொழிலுக்கான தொழில் ரகசியம் என கூறப்படுகிறது.
இதே பாணியில் கொரட்டூர், அம்பத்தூர், ஆவடி, அண்ணா நகர் என சென்னையில் பல்வேறு பகுதியில் தனது கைவரிசை காட்டியுள்ளான். கொள்ளையடித்த பொருட்களை விற்று தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் லட்சக்கணக்கில் வங்கி கணக்கில் சேமித்து வைத்துள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்