சித்தராமையா முதல்வர் ஆனதும் காவிரியில் தண்ணீர் வரும் - குஷ்பு..
கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பேசும் போது பா.ஜனதாவை ஆட்சிக்கு வரவிடாதீர்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் காவிரி தண்ணீரை கொடுத்து விடுவார் என்று பேசினார்.
ராகுலின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. காவிரி உரிமைக்காக தமிழகத்தில் காங்கிரசார் போராடி வரும் நிலையில் கர்நாடகத்தில் காங்கிரஸ் நிலைப்பாடு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதாவினர் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார்கள். சாதி,மத மோதல்கள் தீர்ந்து விட்டது. 61 ஆயிரம் கோடி வங்கி மோசடி பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. நீரவ் மோடி, விஜய்மல்லையா எல்லோரையும் கூட்டி வந்து விட்டார்கள்.
விவசாயிகள் பிரச்சினை தீர்ந்து விட்டது. எல்லோரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போட்டு விட்டார்கள். நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லாததால் ராகுல் பற்றி இப்படி எதையாவது வைரலாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
காவிரி பிரச்சினை இன்று, நேற்று ஏற்பட்ட பிரச்சினை அல்ல. பெருந்தலைவர் காமராஜர், கருணாநிதி ஆகியோர் முதல்வராக இருந்த போது அந்த மாநில முதல்வரோடு பேசி தண்ணீர் பெற வில்லையா?
அ.தி.மு.க.வினர் கவுரவம் பார்க்கிறார்கள். ஜெயலலிதா என்றாவது கர்நாடக முதல்வரோடு பேசியது உண்டா? இப்போது இருக்கும் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். பேசியது உண்டா?
தண்ணீரை கொண்டு வருவோம் என்று பா.ஜனதாவினரும், அ.தி.மு.க. மந்திரிகளும் பேசுவது மக்களை முட்டாளாக்குவது.

கர்நாடகத்திலும் மழை இல்லை. ‘டப்’பில் பிடித்து வைத்துக் கொண்டு தர மாட்டேன் என்று சொல்வதல்ல. இந்த ஆண்டு பருவ மழை நன்றாக இருக்கும் என்கிறார்கள்.
கர்நாடக தேர்தலில் மீண்டும் சித்தராமையா முதல்வர் ஆவார். காவிரியில் தண்ணீர் வரும்.
ராகுல் பேச்சில் எந்த முரண்பாடும் இல்லை. எங்களுக்கு விவசாயிகள் மீது அக்கறை இருக்கிறது.
பா.ஜனதாவினருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் இப்போதே பேசி இருக்கலாமே. தண்ணீர் நிச்சயம் சித்தராமையா தருவார். காவிரி மேலாண்மை வாரியம் என்பது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா அமைக்க வேண்டியது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்