Header Ads

வடகொரியா - தென்கொரியா இடையே, விரைவில் பேச்சுவார்த்தை..

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் தென்கொரியாவின் யியோங்சங் நகரில் நடக்க உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க வடகொரிய அணியை அனுப்ப பரிசீலனை செய்வதாக அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருந்தார். இது தொடர்பாக இரு நாடுகளும் விரைவாக ஆலோசனை நடத்தி சாத்தியக்கூறுகளை விவாதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கிம் கருத்தை வரவேற்றுள்ள தென்கொரிய அதிபர் முன் ஜே-இன், உடைந்த உறவை முன்னேற்றுவதற்கான ஒரு வாய்ப்பு என்று கூறியுள்ளார். நேற்று மந்திரி சபையில் பேசிய ஜே-இன், வடகொரியாவின் அணு சோதனைகள் இரு நாடுகள் இடையேயான உறவை பாதிப்பதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

வடகொரியா - தென்கொரியா எல்லையில் உள்ள பான்முன்ஜோம் என்ற கிராமத்தில் இந்த பேச்சுவார்த்தை நடக்கலாம் என தென்கொரிய மந்திரி சோ யங்-ஜியான் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் நடக்க உள்ள இந்த பேச்சுவார்த்தையில் ஒலிம்பிக் விவகாரம் அல்லாமல் வேறு விவகாரங்களும் இடம் பிடிக்கலாம் என்று தெரிகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரி என பல்வேறு தடைகளுக்கு வடகொரியா உள்ளாகியுள்ள நிலையில், கிம்-மின் இந்த முடிவு அவர் கீழே இறங்கி வர தயாராக உள்ளார் என்பதையே காட்டுகிறது என அரசியல் நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.