ஐ. நா சபை எச்சரிக்கை விடுத்தும், ஈழத் தமிழ் அகதியை நாடு கடத்திய அவுஸ்ரேலியாவால்..

ஈழத்தமிழர்கள் நாடு கடத்தப்பட்டால் ஸ்ரீலங்காவில் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாகலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்த நிலையில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவரை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஸ்ரீலங்காவிற்கு நாடு கடத்தியுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக நாட்டைவிட்டு தப்பிவந்த ஈழத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் ஸ்ரீலங்காவில் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாகலாம் என்பதால் அவர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை கடந்த டிசெம்பர் 11 ஆம் திகதி கோரிக்கை விடுத்திருந்தது.
உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறி 2012 ஆம் ஆண்டு படகுமூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்து அரசியல் தஞ்சம் கோரிய ராஜா என்ற ஈழத் தமிழ் இளைஞரே புதன்கிழமை இரவு அவுஸ்திரேலிய அரசினால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் ஐ.பி.சி தமிழுக்குத் தெரிவித்தனர்.
படகு அகதிகள் தடுத்துவைக்கப்படும் விலாவூட் அகதிகள் தடுப்பு முகாமிலிருந்து கைகளுக்கு விலங்கிட்டு ராஜா என்ற ஈழத் தமிழ் இளைஞரை அழைத்துச் சென்ற அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அதிகாரிகள் தமது எச்சரிக்கைகளையும் செவிமடுக்காது சிட்னி விமான நிலையத்தில் வைத்து விமானத்தில் ஏற்றி நாடு கடத்தியதாக அவுஸ்திரேலியாவின் அகதிகளுக்கான ஆலோசணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கான சட்டத்தரணி சாரா டலே தெரிவித்துள்ளார்.
ராஜா என்ற ஈழத் தமிழ் இளைஞர் நாடு கடத்தப்பட்டால் ஸ்ரீலங்காவில் அவர் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாகலாம் என்று எச்சரித்தும் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அதிகாரிகள் தமது எச்சரிக்கைகளையும் செவிமடுக்காது அவரை நாடு கடத்தியதாக சட்டத்தரணி சாரா டலே கவலை வெளியிட்டார்.
அவுஸ்திரேலிய அரசிடம் அரசியல் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களை இதுவரை சமர்ப்பிக்காத தஞ்சக்கோரிக்கையாளர்கள் கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
இல்லையெனில் அவர்களது தஞ்சக் கோரிக்கை ஒருபோதும் பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று கடந்த மே மாதம் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் அறிவித்திருந்தார்.
அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஆயிரக்கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்கள், முறையான சட்ட உதவிக்காக அகதி சட்ட மையத்தில் நீண்ட காலமாக காத்திருக்கும் சூழல் நிலவும் நிலையில், ‘பாஸ்ட்- டிராக்’ என்ற இந்த துரித நடைமுறையின் கீழ் தஞ்சக் கோரிக்கைக்கான புதிய விண்ணப்பங்களை அளித்த பலர், சாதாரண நடைமுறையின் கீழ் கிடைக்கும் பாதுகாப்பு மற்றும் மேல்முறையீட்டுக்கான சலுகைகளை இழக்கின்றனர்.
இதற்கமைய 41 பக்கங்களைக் கொண்ட ஆங்கில விண்ணப்பத்தை நிரப்ப போராடிய ராஜா என்ற ஈழத் தமிழ் இளைஞர், குறித்த காலக்கெடுவிற்குள் அவ்விண்ணப்பத்தை நிரப்பும் சட்ட உதவியினை பெறமுடியாது போனது. இதனாலேயே அவர் அவுஸ்திரேலியாவினால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ராஜாவைப் போல் ஏழாயிரம் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு அக்டோபர் 1 காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ராஜாவைப் போன்று 71 பேர் தங்கள் விண்ணப்பங்களை காலக்கெடுவிற்குள் சமர்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையிலேயே அவர்களின் விண்ணப்பம் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது.
நாடு கடத்தப்பட்ட ராஜா என்ற தமிழ் இளைஞருக்கு சட்ட உதவி வழங்கிய அவுஸ்திரேலிய அகதிகளுக்கான ஆலோசணை மற்றும் சட்ட உதவி மையத்தின் தலைமை வழக்கறிஞர், சாரா டேய்ல் கவலை வெளியிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான தஞ்சக்கோரிக்கையாளர்களின் வழக்கை பரிசீலித்த அடிப்படையில் ராஜா என்ற இளைஞனின் வழக்கு அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பு வழங்குவதற்கான நம்பகமான வழக்காகும் என்று குறிப்பிட்டுள்ள சட்டத்தரணி டேய்ல், ஆனால் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை காலக்கெடுவிற்குள் வழங்கவில்லை என சுருக்கமாக தங்களது பதிலை வழங்கி அவரை நாடு கடத்தியமை வேதனைக்குரிய விடையம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து தமிழர்கள் நாடுகடத்தப்படும் நிலையைப் பற்றி கருத்துத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய குடிவரவுத்துறையின் பேச்சாளர் “தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கான சர்வதேச கடமையின் கீழ் உள்ளடக்கக்கூடிய எவரையும் தாங்கள் திருப்பி அனுப்புவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐ.நா. சிறப்பு அதிகாரி பென் எம்மெர்சன், தேசியப் பாதுகாப்பு என்ற அடிப்படையில் இன்றும் பலர் கைது செய்யப்படுவதும், சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்ந்து நடப்பதாகக் கவலை தெரிவித்திருந்தார்.
இப்படியான சுழலில் அவ்வப்போது தஞ்சம்கோரும் தமிழ் அகதிகள் நாடுகடத்தப்படக்கூடிய சம்பவங்கள் அரங்கேறி வருவது குறித்து அச்சமும் கவலைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்