Header Ads

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொன்ற கொடூரம்..

அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள உக்லானா பகுதியின் சாலையோரத்தில் கூடாரம் அமைத்து ஒரு குடும்பத்தினர் வசித்து வந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனைவரும் தூங்கச் சென்றனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, அந்த குடும்பத்தில் உள்ள 6 வயது சிறுமியை காணவில்லை. மகளை காணாத தாய் சுற்றுமுற்றும் தேடிப் பார்த்தார். ஆனால் சிறுமி பற்றிய தகவல் கிடைக்காததால் வருத்தத்தில் இருந்தார்.

இதற்கிடையே, அவர்கள் வசித்து வந்த டெலிபோன் எக்சேஞ்ச் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் சிறுமி கொல்லப்பட்டு கிடப்பதாக காவல் நிலையத்துக்கு, தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு கிடப்பதை கண்டனர். சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து, சிறுமியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஆனால், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிறுமியின் பெற்றோரும், உறவினரும் மறியலில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ‘சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் குறித்து விசாரிக்க டி.எஸ்.பி. நிலையிலான அதிகாரி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்படுகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். மேலும், அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் உள்ள சிக்னல்களை வைத்து துப்பு துலக்குவதற்காக,  சைபர் பிரிவின் உதவியையும் நாடியுள்ளோம்’ என தெரிவித்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.