Header Ads

33 ஆண்டுகள் ஆட்சி செய்த, ஏமன் முன்னாள் அதிபர் கொலையா..?

ஏமன் நாட்டில் 33 ஆண்டுகள் அதிபராக இருந்தவர் அலி அப்துல்லா சலே. பொதுமக்கள் மற்றும் அரசியல் நிர்பந்தம் காரணமாக, இவர் 2012-ம் ஆண்டு பதவி விலகினார்.

பின்னர், 2015-ம் ஆண்டு, அப்தராப்பு மன்சூர் ஹடி, அதிபராக பதவி ஏற்றார். ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், அவருக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் குதித்தனர். இதனால், சவுதி அரேபியாவுக்கு மன்சூர் ஹடி தப்பிச்சென்றார். அவருக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை, ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் சண்டையில் குதித்தது.

அதே சமயத்தில், பதவி இழந்த அதிபர் அலி அப்துல்லா சலே தலைமையிலான படைகளும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் கைகோர்த்து, கூட்டுப்படைக்கு எதிராக போரிட்டது.

குண்டு வைத்து கொலை

இதற்கிடையே, கடந்த வாரம் திடீர் திருப்பமாக, அலி அப்துல்லா சலேவுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான உறவு முறிந்தது. இருதரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து போரிட்டனர்.

இந்நிலையில், அலி அப்துல்லா சலே படைகளுக்கு எதிராக முன்னேறி வந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், தலைநகர் சனா அருகே உள்ள அலி அப்துல்லா சலே வீட்டை குண்டு வைத்து தகர்த்தனர்.

இதில், சலே கொல்லப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள வானொலியிலும், அல்-மசிரா டி.வி.யிலும் நேற்று அறிவித்தனர்.

உடல் காண்பிக்கப்பட்டது

அலி அப்துல்லா சலேவின் உடல் என்று கூறி, தலைக்காயத்துடன் ஒரு சடலம் காண்பிக்கப்பட்டது. அதை போர்வையால் சுற்றி, கிளர்ச்சியாளர்கள் இழுத்து செல்வது, அந்த வீடியோ காட்சியில் காண்பிக்கப்பட்டது. அப்போது, அவர்கள் சலேவுக்கு எதிராக கோஷமிட்டனர்.

சலேவுடன் அவருடைய ஆதரவாளர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டதாகவும் கிளர்ச்சியாளர்களின் டி.வி.யில் வெளியான அறிவிப்பு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும், சலேவின் படையை சேர்ந்த யாரும் இச்செய்தியை உறுதி செய்யவில்லை.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.