பிரபல ஈழத்து இசையமைப்பாளர் திருமலை பத்மநாதன் காலமானார்
ஈழத்து திரைப்படத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் திரு.தாமோதரம்பிள்ளை. பத்மநாதன் (திருமலை பத்மநாதன்) 18.11.2017 சனிக்கிழமையன்று கொழும்பில் காலமானார். 15௩௧941 இல் திருக்கோணமலையில் பிறந்த திரு.தாமோதரம்பிள்ளை பத்மநாதன் அவர்கள், ஈழத்து தமிழ்சினிமாத்துறையில் முன்னணி இசையமைப்பாளராகத் திகழ்ந்தவர். ரகுநாதனின் 'நிர்மலா' வேதநாயகம் அவர்களின் 'தென்றலும் புயலும்' போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். நிர்மலாவில் இவர் இசையில் உருவான ' கண்மணி ஆடவா' என்ற பாடல்' மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களால் பெருதும் பாராட்டப்பட்டது.
இன்றும் இவர் இசையமைத்த பல ஈழத்துப் பாடல்கள்' இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழ் வானொலிகளில் ஒலிபரப்பப்படுகின்றன. 'எக்கோடியன்', 'சித்தார்,' கர்நாடக இசை என்று இசையின் பல பரிமாணங்களை முறையாகக் கற்று தேர்ந்த திரு. பத்மநாதன் அவர்களின் பங்களிப்பு ஈழத்து தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.இவர். திருகோணமலையில் நடந்த மானுடத்தின் ஒன்றுகூடல் நிகழ்வில் புதுவை இரத்தினதுரை அவர்களால் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டவர் என்பதுடன், இவர் பிரபல அரசியல் ஆய்வாளர் திரு. இதயச்சந்திரன் அவர்களின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் குறித்து ஈழத்தின் மூத்த கலைஞர் ரகுநாதன் அவர்கள் கூறுகையில்......
'நான் 1972ல் தமிழகம் சென்றவேளை நண்பர் ஒருவரினால் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். திரைப்படத் தயாரிப்பாளர் - நடிகர் என்றதும், என்ன படம் செய்தீங்க என்று எம்.எஸ்.வி கேட்டார்.நிர்மலா என்றதுமே 'கண்மணி ஆடவா.. 'என்று அவருக்கே உரியபாணியில் பாடி அற்புதமான மெட்டு, கொஞ்சம் வாத்தியங்கள் சேர்த்திருந்தால் பாடல் இன்னும் அருமையாக வந்திருக்கும் என்று பாராட்டினார். இதனை உடனடியாகவே தொலைபேசி ஊடாக அன்று பத்மநாதனிடம் தெரிவித்தேன்.' என்றார்.
இவ்வாறான திறமைகளை உடைய எமது கலைஞர்கள் அவற்றை வெளிப்படுத்த சரியான வாய்ப்புகள் இல்லாமலேயே வாழ்ந்து மடிகிறார்கள். ஈழத்துக் கலையுலகில் தடம்பதித்த திரு.தாமோதரம்பிள்ளை பத்மநாதன் அவர்களது இழப்பிற்கு அதிர்வு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்