Header Ads

இரண்டும் குழந்தைகள்தான்: சிரியக் குழந்தைக்குக் கிடைத்த கவனம், தமிழ் குழந்தைக்கு இல்லையே..!

kandhu_vatti

சென்னை: சமீபத்தில் தமிழர்களை மட்டும் அதுவும் ஒரு சிலருக்கு மட்டுமே பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு விஷயம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேர்ந்த துயரம்தான்.
திங்கட்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த தம்பதி, தங்களது சின்னஞ்சிறு குழந்தைளுடன் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தனர். இதில் படுகாயமடைந்த நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணித்தனர்.
இந்த தீக்குளிப்புக்குக் காரணமாக, கந்துவட்டிக் கொடுமை அல்லது அதற்குப் பின்னணியாக இருக்கும் வறுமை, வறுமைக்குக் காரணமாகும் வேலையில்லாத் திண்டாட்டம் என எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.
ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக, பூவினும் மெல்லிய சின்னஞ்சிறு குழந்தைகள் இங்கே தீயில் கருகின. அதுவும் பலரது கண் முன்னே.
இந்த சம்பவத்தையும், புகைப்படத்தையும் பார்க்கும் யாவர்க்கும், 2015ம் ஆண்டில் சிரிய அகதிகளின் குழந்தை ஒன்று கடலில் விழுந்து சடலமாக கரை ஒதுங்கிய சம்பவம் நினைவுக்கு வரலாம்.
சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போரின் போது உயிர் தப்பிக்க துருக்கியில் இருந்து கிரீஸுக்கு ஒரு குடும்பம் அகதிகளாக வந்த போது, படகு விபத்தில் சிக்கியது. அதில் இருந்தவர்கள் கடலில் விழுந்து உயிரிழந்தனர். அந்த படகில் இருந்த குழந்தை ஆலன் குர்தியின் சடலம் துருக்கி கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியது.
ஆலன் குர்தியின் சடலம் கரை ஒதுங்கிய புகைப்படம், அதனை துருக்கி மீட்புப் படை வீரர் ஒருவர் கையில் ஏந்திச் செல்லும் புகைப்படமும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த புகைப்படம் எல்லைக் கோடுகளுக்காக போரில் ஈடுபடும் அரசுகளுக்கும், அண்டை நாட்டு மக்களை அகதிகளாகப் பார்ப்போரின் நெஞ்சத்திலும் சம்மட்டியால் அடித்தது போன்று உள் உணர்வை தட்டி எழுப்பியது. 
சிரியப் போரும் அதனால் கொல்லப்படும் மக்களும், ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக செல்லும் துயரங்களும், அதில் சிக்கும் குழந்தைகள் படும் துன்பங்களையும் வெளி உலகுக்கு உணர்த்தியது ஆலன் குர்தியின் புகைப்படம்.
ஆனால், இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயிரோடு எரிக்கப்பட்ட 2 வயதுக் குழந்தை அட்சய பரணியாவின் மரணம் தமிழர்களுக்குக் கூட எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. தமிழகத்தில் நிலவும் பல அடிப்படை அவலங்கள்தான், இன்று அந்த பச்சிளம் குழந்தையை காவு வாங்கியது என்பது மனசாட்சி உள்ளோருக்கும் புரிய மறுக்கிறது.
'தமிழன் என்றோர் இனமுண்டு 
தனியே அவர்க்கோர் குணமுண்டு'

என்று நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை தன் கவிதையில் குறிப்பிட்டிருந்தார். அதோடு நின்றாரா? 

'அமிழ்தம் அவனது மொழியாகும் 
அன்பே அவனது வழியாகும்' என்றும் மேலும் சிறப்பித்தார்.
ஆனால், உண்மையில் தமிழன் என்ற இனம் மட்டுமே இந்தியாவிலும் சரி, உலக நாடுகளிலும் சரி அடித்தால் கேட்க ஆளில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சிரியக் குழந்தையின் மரணம் உலகப் பிரச்னையாக இருந்ததால் உலக அளவில் பேசப்பட்டதா? இன்று நெல்லையில் தீயில் எரிந்த குழந்தைக்குப் பின்னால் எந்த சமூகப் பிரச்னையும் இல்லையா? மறைமுகமாக நமது அரசுகளின் எந்த அக்கறையின்மையும் தெரியவில்லையா?
இதனை வெறும் ஒரு குடும்பத்தின் பிரச்னையாக பார்ப்பதால்தான் இது கவனம் பெறத் தவறியது. நிச்சயம் இல்லை, இது சமூகத்தின் அவலம். அதுவும் தமிழன் எனும் கேட்பாரற்றுக் கிடக்கும் சமூகத்தின் அவலம்.
இப்போது நமக்கு நினைவுக்கு வருவது முண்டாசுக் கவிஞன் பாரதியின் அனல் பொங்கும் கோபக் குரல்தான்..

தமிழ்ச்சாதி! 
'விதியே விதியே தமிழ்ச்சாதியை 
என் செயக் கருதியிருக்கிறாயெடா'..?

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.