தீவிரமடையும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை விவகாரம்: புதிய தகவல்
யாழ். பல்லைக்கழக மாணவர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றுக்கு வழங்கப்பட்ட முதல் தகவலில் பிழையான, உண்மைக்கு புறம்பான தகவல்கள் வழங்கப்பட்டதா? என்பது தொடர்பான விசாரணைகள் உக்கிரமடைந்திருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
குறித்த வழக்கு நேற்று மீண்டும் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட இரு மாணவர்கள் சார்பிலும் மன்றில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,விசாரணையின் போது சாட்சியாளர்களை பொலிஸ் தரப்பினர் விசாரணை என்னும் பெயரில் அச்சுறுத்தியது தொடர்பான அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கட்டளை பிறப்பித்திருந்தார்.
மேலும் இந்த வழக்கின் முதலாவது சந்தேக நபர் குறித்த சூட்டுச் சம்பவம் தொடர்பாக, சம்பவம் நடைபெற்ற அன்றே தனது தகவல் குறிப்பு புத்தகத்தில் பதிவு செய்ததாகவும், மேலதிகாரிக்கும் அது தொடர்பாக தெரியப்படுத்தியதாகவும் மன்றிற்கு தெரியப்படுத்தியிருந்தார்.இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு பொலிஸார் வழங்கிய முதல் தகவலில் அது ஏன் மறைக்கப்பட்டு, உண்மைக்கு புறம்பான தகவல் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டது என்பது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறித்த விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு உகந்ததான அத்தனை உத்தரவுகளையும் கொடுக்க வேண்டும் என்றும் பதிக்கப்பட்டவர்கள் சார்பில் மன்றிடம் கோரியிருந்தோம்.எதிர்வரும் ஜுலை மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த தவணை விசாரணையின் போது குறித்த கட்டளையினை நீதவான் ஆக்குவார் என்றும் சட்டத்தரணி சுமந்திரன் மேலும் தெரிவித்திருந்தார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்