Header Ads

ஒப்பாரி வைத்து மயங்கி விழுந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்! மகளீர் தினத்தில் வவுனியாவில் நடந்த சோகம்

சர்வதேச பெண்கள் தினத்திலாவது பெண்களே எமக்காகவும் குரல் கொடுங்கள் என தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் ஒப்பாரிப் போராட்டம் ஒன்றினை இன்று நடத்தினர். கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் நிலையில் 13 வது நாளாகிய இன்று (08.03) தமது போராட்ட இடத்தில் ஒப்பாரி போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். 


தம்மை தாமே கட்டித் தழுவி தமது மனதில் உள்ள ஆதங்கங்களை கூறியபடி ஒப்பாரி வைத்து அழுதனர். இதனால் அப்பகுதி சோகமயமானதுடன் மூன்று தாய்மார் மயங்கி விழுந்தனர். இதன் போது கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் மாவட்ட தலைவி கா.ஜெயவனிதா, பங்குனி 8 ஆம் திகதி உலகம் முழுவதும் மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் தாம் பெற்ற உரிமைக்களுக்காக பெருமைப்படவும், 


பெற வேண்டிய உரிமைக்காக போராட வேண்டியும் திடசங்கற்பம் பூணும் நாளாக இந்நாள் இருக்கின்றது. இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக, கணவர்களுக்காக, தந்தையர்களுக்காக, சகோதாரர்களுக்காக போராட வேண்டிய நிலையில் பெண்களாகிய நாம் உள்ளோம். தொடர்ந்து இந்த அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டு வரும் நாம் 13 நாட்களாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். உலக பெண்களே, மனித உரிமை அமைப்புக்களே, பெண்கள் அமைப்புக்களே, 


பொது மக்களே இன்யைற தினத்திலாவது எமக்காக ஒரு கணம் சிந்தியுங்கள். எமது நியாயமான போராட்டத்தை வலுச் சேர்த்து ஒரு நீதியைப் பெற வாருங்கள் என கண்ணீர் விட்டழுதபடி தெரிவித்தார். இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.