ஐ.எஸ்.ஸிடம் சிக்க விரும்பாத பிரித்தானிய வீரர் செய்த காரியத்தால் லண்டன் மக்கள் பெரும் பெருமையில்
ஐ.எஸ்.இயக்கத்திற்கு எதிராக குர்திஷ் படைகளுடன் இணைந்து போரிட்ட பிரித்தானிய வீரர் ஒருவர், ஐ.எஸ்.ஸிடம் சிக்காமல் இருப்பதற்காக தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட விடயம் தற்போது தெரியவந்துள்ளது.
ரயான் லொக் (20) என்பவர் ஒரு பிரித்தானியர். இவர் சமையல் கலை நிபுணராகப் பணிபுரிந்துவந்தவர்.
கடந்த ஓகஸ்ட் மாதம், தனது குடும்பத்தினரிடம் துருக்கிக்கு உல்லாசப் பயணம் செல்வதாகக் கூறிவிட்டு சிரியா சென்றவர், அங்கு குர்திஷ் படைகளுடன் இணைந்துகொண்டார்.
கடந்த டிசம்பர் மாதம், ரக்காவில் இடம்பெற்ற ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போரின்போது, எதிர்பாராத விதமாக ஐ.எஸ்.ஸிடம் ரயான் சிக்கிக்கொள்ளும்படியான சூழல் உருவானது. இந்த நிலையில், அவர்களிடம் பிடிபட விரும்பாத ரயான்,
தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
ஆயுதங்களை இயக்கும் அனுபவமோ, போர் அனுபவமோ இல்லாதபோதும் அது குறித்த ஆர்வம் அதிகமாகவே இருந்ததால் ரயானை குர்திஷ் படையினர் இணைத்துக்கொண்டனர். குறுகிய காலத்திலேயே கணிசமான அளவு போர் நுணுக்கங்களை அறிந்துகொண்ட ரயான் தீவிரமாகப் போராடியதாக சக படையினர் கூறினர்.
“போர்க் கைதிகளாகப் பிடிபடுபவர்களை ஐ.எஸ். இயக்கம் கொடூரமாகக் கொலை செய்வதை உலகுக்கு உணர்த்தும் வகையிலேயே ரயானின் தற்கொலை அமைந்திருக்கிறது.
ஒரு இக்கட்டான சூழலில் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. என்றபோதும் துணிச்சலுடன் அந்த முடிவை எடுத்த ரயானுக்கு, இராணுவத்தில் உயரிய அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்” என்று குர்திஷ் மனித உரிமை ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்