பெண்ணுடன் மகன் தொடர்பில் இருந்ததால் அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்த பெற்றோர்..!
வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணுடன் மகன் தொடர்பில் இருந்ததால் அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்த பெற்றோர் 3 மாதங்களுக்கு பின் சிக்கியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த கூலித் தொழிலாளி செல்லத்துரையின், மனைவி சவுந்தர்யா(21). இவர் திடீரென்று மாயமாகியதால், அவரது தாய் தங்கம்மாள் கடந்த 23ம் தேதி பரமத்திவேலூர் போலீஸில் புகார் அளித்தார்.
இந்த நிலையில், மாயமான சவுந்தர்யாவுக்கும், அதே பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சூர்யா(24) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து, போலீஸார் சூர்யா வீட்டிற்கு சென்று அவரது தந்தை மனோகரன் மற்றும் தாய் சுமதியை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சூர்யாவுடன் தொடர்பில் இருந்த சவுந்தர்யா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரை வற்புறுத்தியதாகவும், இதற்கு சூர்யாவின் பெற்றோர் மறுப்பு தெரிவிக்க சவுந்தர்யா தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த சூர்யாவின் பெற்றோர் சவுந்தர்யாவை தீர்த்து கட்ட முடிவு செய்து, கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவு திருமணம் செய்து வைப்பதாக, சவுந்தர்யாவிடம் ஆசை வார்த்தை கூறி, தங்களது செங்கல் சூளைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சவுந்தர்யாவை கட்டையால் சரமாரியாக அடித்துக் கொலை செய்து உடலை அங்கேயே புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சூர்யாவின் பெற்றோரை போலீஸார் கைது செய்தனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்