டிரம்பை ஏன் சந்திக்கிறார் தலாய்லாமா: இதனால் கடும் கோபத்தில் சீனா
புத்தமத தலைவர் தலாய்லாமா அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்பை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
டிரம்பை சந்திக்கிறார் தலாய்லாமா: கோபத்தில் சீனா?
உளான்பாத்தர்:
நாடுகடத்தப்பட்ட திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்பை சந்திக்க உள்ளதாக இன்று தெரிவித்துள்ளார்.
தலாய்லாமா தற்போது மங்கோலியா நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு தலைநகர் உளான்பாத்தரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சுதந்திர உலகின் முன்னணி தேசமாக அமெரிக்கா உள்ளதாக நான் எப்போதும் கருதுகிறேன்” என்றார்.
மேலும், “அமெரிக்கா செல்வதில் சில பிரச்சனைகள் உள்ளது என்று நினைக்கிறேன்.
அதனால் புதிய அதிபரை சென்று பார்ப்பேன்” என்று கூறினார்.
முன்னதாக வெள்ளை மாளிகையில் தலாய்லாமாவை அதிபர் பராக் ஒபாமா கடந்த ஜூன் மாதம் சந்தித்தார். அதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த 8 வருடங்களில் அதிபர் ஒபாமா 8 முறை தலாய்லாமாவை சந்தித்துள்ளார்.
அதேபோல் தற்போது தலாய்லாமா அமெரிக்கா செல்ல உள்ளதும் சீனாவிற்கு கோபத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் செங் சுவாங் கூறுகையில், “தலாய்லாமா உலகில் பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ள தலைவர்களை சந்தித்து சீனாவிற்கும் அவர்களுக்கும் இடையிலான உறவை பலவீனப்படுத்துகிறார்’ என்று தெரிவித்தார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்