வட கொரியாவுடனான இராஜதந்திர உறவுகளை, அனைத்து உலக நாடுகளும் துண்டிக்க வேண்டும்...
வட கொரியா புதிதாக ஏவுகணையை ஏவிப் பரிசோதித்ததையடுத்து அந்நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை அனைத்து நாடுகளும் துண்டிக்க வேண்டும் என அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரியாவுக்கான எண்ணெய் விநியோகங்களை நிறுத்த சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி கூறினார்.
வட கொரியாவின் ஏவுகணைப் பரிசோதனையையடுத்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கூட்டப்பட்ட அவசரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அமெரிக்கா மோதல் ஒன்றை நாடவில்லை எனவும் ஆனால் போர் ஒன்று இடம்பெறும் பட்சத்தில் வட கொரியா முற்று முழுதாக அழிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
வட கொரியா கடந்த இரு மாத காலப் பகுதியிலான தனது முதலாவது ஏவுகணைப் பரிசோதனையை நேற்று முன்தினம் புதன்கிழமை மேற்கொண்டதையடுத்தே இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த ஏவுகணையானது 4,475 கிலோமீற்றர் உயரத்துக்குச் சென்று சுமார் 13,000 கிலோமீற்றர் தூரத்திற்கு பயணிக்கக் கூடியது என வட கொரியா உரிமை கோரியுள்ளது. இது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமியின் வளிமண்டலத்துக்குள் போராயுதமொன்றை பிரயோகித்து தாக்குதலை நடத்துவதுடன் ஒப்பிடுகையில் 10 மடங்கு அதிக உயரம் என அந்நாடு கூறுகிறது.
இதன் பிரகாரம் மேற்படி ஏவுகணையானது பிரித்தானிய லண்டன் நகர், அமெரிக்க நியூயோர்க் நகர் உள்ளடங்கலாக உலகின் அநேக நகர்களை சென்று தாக்கும் வல்லமையைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஏவுகணையின் தாக்குதலிலிருந்து தென் அமெரிக்காவும் ஆபிரிக்காவின் சிறு பகுதியும் மட்டுமே விடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் வட கொரியா அத்தகைய உச்ச நிலைத் தொழில்நுட்ப ஆற்றலைப் பெற்றிருப்பது சாத்தியமில்லை என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.
எனினும் இந்த ஏவுகணைப் பரிசோதனையானது எதுவிதத்திலும் குறைகூற முடியாத சாதனையொன்றாகவுள்ளதாக வட கொரிய தலைவர் கிம் யொங் – உன் குறிப்பிட்டுள்ளார்.
வட கொரியா இந்த வருடத்தில் இதையொத்த அநேக ஏவுகணைப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ள போதும், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனையானது முழு அமெரிக்காவையும் இலக்குவைக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது என வட கொரிய அரசாங்கம் தெரிவிக்கிறது.
இத்தகைய அத்துமீறல் நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் அது வட கொரியாவின் ஸ்திரத்தன்மையை மேலும் சீர்குலைக்க மட்டுமே வழிவகை செய்யும் என நிக்கி ஹேலி எச்சரித்துள்ளார்.
வட கொரியா தனது ஏவுகணை மற்றும் அணுசக்திப் பரிசோதனைகளை நிறுத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள ரஷ்யா, அமெரிக்கா இந்த மாதம் தென் கொரியாவுடன் இணைந்து நடத்தத் திட்டமிட்டுள்ள இராணுவப் பயிற்சிகளை நிறுத்த வேண்டும் எனவும் அந்தப் பயிற்சிகள் நிலைமையை மேலும் பாரதூரமாக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தனது இராணுவ பயிற்சிகளை நிறுத்துவதற்கு பதிலாக வட கொரியா தனது ஆயுதப் பரிசோதனைகளை நிறுத்தக்கூடும் என சீனா யோசனையை முன்வைத்துள்ளது. இதையொத்த யோசனை கடந்த காலத்தில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட போது வட கொரியா அதனை நிராகரித்திருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வட கொரியாவால் மேற்கொள்ளப்பட்ட அணுசக்திப் பரிசோதனை குறித்து நேற்று முன்தினம் புதன்கிழமை குறிப்பிடுகையில், அந்நாட்டுத் தலைவர் கிம் யொங் – உன்னை ' நோயுற்ற நாய்க்குட்டி' என விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்