Header Ads

அதிவேகமாக 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, அஸ்வின் உலக சாதனை..

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் திகழ்ந்து வருகிறார். 31 வயதாகும் இவரின் அபார பந்து வீச்சால் இந்தியா தனது சொந்த மண்ணில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போடுகிறது. இந்தியாவின் தொடர் வெற்றிக்கு 60 சதவீதம் அஸ்வினின் பந்து வீச்சு என்று விராட் கோலி புகழாரம் சூட்டினார்.

இந்நிலையில் இந்தியா - இலங்கை இடையிலான நாக்பூர் டெஸ்ட் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் அஸ்வின் 53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 99 இன்னிங்சில் பந்து வீசி 292 ரன்கள் வீழ்த்தியிருந்தார். நாக்பூர் டெஸ்டில் 8 விக்கெட் வீழ்த்தினால் அதிவேகமாக 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உலக சாதனைப் படைக்கும் வாய்ப்பு அஸ்வினுக்கு இருந்தது.

பேட்டிங் செய்வதற்கு சாதகமான நாக்பூர் மைதானத்தில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களிலும், 2-வது இன்னிங்சிலும் 166 ரன்களிலும் சுருண்டது. இதற்கு முக்கிய காரணம் அஸ்வின் பந்து வீச்சுதான். இரண்டு இன்னிங்சிலும் தலா நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 54 டெஸ்டில் 101 இன்னிங்சில் 300 விக்கெட்டுக்கள் எடுத்ததன்மூலம், அதிகவேகமாக 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உலக சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டென்னிஸ் லில்லீ 1981-ம் ஆண்டு 56 டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுக்கள் வீ்ழ்த்தியிருந்தார். இதுதான் 36 வருட சாதனையாக இருந்தது. அதை தற்போது அஸ்வின் முறியடித்துள்ளார்.

2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 6-ந்தேதி டெல்லியில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில்  அஸ்வின் அறிமுகமானார். 7 முறை 10 விக்கெட்டுக்களும், 26 முறை ஐந்து விக்கெட்டுக்களும் வீழ்த்தி அஸ்வின் சாதனைப் படைத்துள்ளார்.

அஸ்வினின் அறிமுக விக்கெட் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டேரன் பிராவோ ஆவார். 50-வது விக்கெட்டாக இங்கிலாந்தின் நிக் காம்ப்டனையும், 100-வது விக்கெட்டாக டேரன் சமியையும், 150-வது விக்கெட்டாக தென்ஆப்பிரிக்காவின் இம்ரான் தஹிரையும், 200-வது விக்கெட்டாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனையும், 250-வது விக்கெட்டாக வங்காள தேசத்தின் முஷ்டாபிஜூர் ரஹிமையும், 300-வது விக்கெட்டாக இன்று லஹிரு காமகேயையும் வீழ்த்தியுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.