சவுதியில் 17 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்ட இலங்கை பெண்மணி: அதிர வைக்கும் கண்ணீர் கதை
சவுதி அரேபியாவில் முறையான ஊதியம் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்ட இலங்கை பெண்மணிக்கு 17 ஆண்டுகளுக்கு பின்னர் ஊதிய நிலுவையாக 88,600 சவுதி ரியால் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது 44 வயதாகும் குசுமவதி என்ற இலங்கையர் கடந்த 2000-வது ஆண்டில் சவுதிஅரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளார்.
அப்போது ஹன்சிகா செவ்வந்தி(2) மற்றும் துஷிதா மதுஷா(4) என தனது இரண்டு பிள்ளைகளையும் குசுமவதி இலங்கையில் விட்டுச் சென்றுள்ளார்.
சவுதியில் வீட்டு வேலைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு ஆடுகளை மேய்க்கும் தொழில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல் 8 ஆண்டுகள் ஊதியமாக 400 ரியால் அளவுக்கு அளித்துள்ளனர். மட்டுமின்றி ஒப்பந்த காலத்தில் குசுமவதியை இலங்கை திரும்ப அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த 17 ஆண்டுகளாக நாடு திரும்பாத குசுமவதி தொடர்பில் கொளும்பில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் புகார் ஒன்றை அவரது உறவினர்கள் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சவுதியில் உள்ள இலங்கை தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொண்டதில் குசுமவதி அதீப் எனும் புறநகர் கிராமம் ஒன்றில் ஆடு மேய்த்துவருவதாக தெரிய வந்தது.
சவுதி ஒழுங்குமுறைகள் அடிப்படையில் ஒப்பந்த காலம் முடிவுக்கு வந்ததும் குறித்த நபரை சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும்.
ஆனால் குசுமவதிக்கு பணி வழங்கிய நபர், ஒப்பந்தம் முடிந்த பின்னரும் நாட்டுக்கு திரும்ப முடியாது எனவும், ஆனால் வேறு தொல்லைகள் எதுவும் இருக்காது எனவும் உறுதி அளித்துள்ளார்.
ஏழ்மை காரணமாக குசுமவதி அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது. தூதரக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் பலனாக குசுமவதியை கண்டுபிடித்ததுடன், வேலை ஒப்பந்ததாரரிடம் இருந்து 17 ஆண்டுகளுக்கான ஊதிய நிலுவைத் தொகை 50,000 ரியாலையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
தூதரக அதிகாரிகள் குசுமவதியை மீட்கும்போது அவரிடம் 38,600 ரியால் தொகை கைவசம் இருந்துள்ளது.
தற்போது ஊதிய நிலுவைத் தொகையுடன் மொத்தமாக 88,600 ரியால் பணத்துடன் குசுமவதி இலங்கை திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்