யாழ். பண்ணைக் கடலுக்குள் கலக்கும் மலக் கழிவு!
யாழ். பண்ணைக் கடலுக்குள் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படை முகாமின் கழிவுகள் நேரடியாகவே தனியான குழாய் வழியாகப் செலுத்தப்படுவது தொடர்பில் எவருமே கண்டுகொள்ளவில்லையென அந்தப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அதிரடிப்படை முகாமின் கழிவுகள் அதன் அருகே உள்ள ஒரு வெற்று நிலப்பரப்புக்குள் தொட்டியினூடாக விடப்பட்டு நேரடியாகவே தனியான குழாய் வழியாகப் பண்ணைக் கடலுக்குள் செலுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
மிகவும் இரகசியமான முறையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முகாமின் கழிவுகள் அனைத்தும் நிலத்துக்குக் கீழான குழாய் மூலம் கொண்டுவரப்பட்டு கடலினுள் செலுத்தப்படுகிறது.
அதிலிருந்து எழும் துர்நாற்றம் சகித்துக்கொள்ள முடியாதளவு உள்ளது. மலக் கழிவுகளும் இதன் மூலம் அகற்றப்படுகின்றதா எனக் கருதுமளவுக்கு அந்தக் கழிவுகளில் இருந்து பெரும் துர் நாற்றம் எழுகின்றது.
இதனால் அந்தக் கடற்கரைப் பிரதேசம் மாசடைவது மட்டுமன்றி கடலுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இதனை அண்டிய பகுதியின் ஊடாகவும் தொழிலாளர்கள் கடலுக்குச் செல்கின்றனர். அவர்களுக்குத் தோல் நோய்கள் தொற்றும் அபாயமும் ஏற்படுமோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சுகாதாரத் திணைக்களம் இதனை கண்டுகொள்ள மாட்டாது என்று அந்தப் பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சுகாதார அதிகாரிகள் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாநகர சபையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய சுகாதாரத் திணைக்களம் மற்றும் கடற்றொழில் திணைக்களம் என்பனவும் இதே பண்ணைப் பகுதியிலேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்