கொட்டாஞ்சேனை தமிழர் இருவரின் கடத்தல் விவகாரம்; கடற்படை லெப்டினன் கொமாண்டர் தயாநந்தவை கைது செய்வதை அநுர சேனநாயக்கவே தடுத்தார்
கொட்டாஞ்சேனையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோரின் விவகாரத்துடன் நேரடியாக தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் தர அதிகாரியான தயாநந்தவைக் கைது செய்ய விடாமல் மேல் மாகாணத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவே தடைகளை ஏற்படுத்தியதாக இக்கடத்தல் தொடர்பில் ஆரம்பத்தில் விசாரணை செய்த விசாரணை அதிகாரிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவே இது தொடர்பில் ஆரம்பத்தில் விசாரணை செய்த நிலையில் அப்போது விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் பரிசோதகரான சமந்த குலரத்ன, தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்க ஆகியோரே இவ்வாறு வாக்கு மூலம் வழங்கியுள்ளதாகவும் அதன்படி எதிர்வரும் 28 ஆம் திகதி விளக்கமறியலில் உள்ள அநுர சேனநாயக்கவிடம் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலம் பதிவு செய்யவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக்கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியும் சிறப்பு விசாரணை அதிகாரியுமான நிசாந்த சில்வா கொழும்பு மேலதிக நீதிவான் ஜயராம் டொஸ்கிக்கு நேற்று அறிவித்தார்.
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் இருந்து வெல்லம்பிட்டிய பகுதியை நோக்கி தனது பீ.ஏ.6023 என்ற இலக்கத்தை உடைய வேனில் பயணித்த போது கடத்தப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன் மற்றும் உறவினரான பொரளை, வனாத்தமுல்லையைச் சேர்ந்த இரத்னசாமி பரமானநந் தன் ஆகியோரது கடத்தல் தொடர்பிலான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதே குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியும் கடத்தல்கள் தொடர்பிலான சிறப்பு விசாரணையாளருமான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார்.
இதன் போது அவர் பொலிஸ் பரிசோதகர் இலங்க சிங்கவுடன் இணைந்து நீதிவான் ஜெயராம் டொஸ்கியிடம் சிறப்பு மேலதிக அறிக்கையொன்றையும் சமர்ப்பித்தார்.
இதன் போது நீதிமன்றில் சிறப்பு விசாரணையாளர் நிசாந்த டி சில்வா தெரிவித்ததாவது,
'கனம் நீதிவான் அவர்களே, இந்த விவகாரம் தொடர்பில் ஆரம்பத்தில் சி.சி.டி. யே விசாரணை செய்தது. இது குறித்து நாம் அப்போது கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு (சி.சி.டி)யில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் பரிசோதகர் சமந்த மற்றும் தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்க ஆகியோரை விசாரணை செய்து வாக்கு மூலம் பெற்றோம்.
காணாமல் போன இருவரின் தொலைபேசிகளை கடற்படை லெப்டினன் கொண்டர் தயானந்தவே பயன்படுத்திய நிலையில், அதற்காக அவர்களை கைதுசெய்ய சென்ற போது முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க தம்மை தடுத்து விசாரணைகளை நிறுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந் நிலையில் வரும் 28 ஆம் திகதி நாம் அநுர சேனநாயக்கவிடம் இது குறித்து விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்யவுள்ளோம்.
இதனைவிட கடற்படை லெப்டினன் கொமாண்டர் தயாநந்தவை பலமுறை நாம் விசாரணைக்கு அழைத்தும் அவர் வரவில்லை. தற்போது பயிற்சி நடவடிக்கை ஒன்றில் அவர் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இரு வாரத்துக்குள் அவர் ஏதேனும் ஒரு தினத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் ஆஜராக உத்தரவிட வேண்டும்.' என்றார்.
புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைக்கு அனுமதியளித்த நீதிவான் ஜெயராம் டொஸ்கி, வழக்கை எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணாகொட கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி தனது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரான லெப்டினன் கொமாண்டர் முனசிங்க ஆரச்சிகே தொன் நிலந்த சம்பத் முனசிங்கவுக்கு எதிராக செய்த முறைப்பாடானது மேலதிக விசாரணைகளுக்காக முன்னாள் பொலிஸ் மா அதிபரினால் 2009 ஜூன் 10 ஆம் திகதி பொலிஸ் மா குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பாரப்படுத்தப்பட்டது.
இந் நிலையில் நாம் முன்னெடுத்த விசாரணைகளில் சம்பத் முனசிங்கவின் கீழ் இருந்த கரண்ணாகொடவின் பாதுகாப்பு அணியில் இருந்த லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆராச்சியின் கீழான குழுவே இந்த கடத்தல்களை முன்னெடுத்திருந்தமை தெரியவந்தது.
எலகந்த, கொட்டாஞ்சேனை, கொழும்பு 13, தெஹிவளை - பெர்னாண்டோ வீதி, கட்டுநாயக்க விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு உத்திகளை பயன்படுத்தி இக்கடத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சூசைப்பிள்ளை அமலன் லியோன், ரொஹான் ஸ்டென்லி லியோன், கஸ்தூரி ஆரச்சிகே எண்டன், கஸ்தூரி ஆரச்சிகே ஜோன் ரீட், ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஷ்வரம் ராமலிங்கம், மொஹமட்டிலான் ஜமால்டீன், சாஜித் மொஹம்மட், அலி அஸ்வர் அல்லது ஹாஜியார் ஆகிய 11 பேர் கடத்தப்ப்ட்டு திருகோணமலை கடற்படை முகாம் வளாகத்தில் உள்ள கடல் மற்றும் சமுத்திரவியல் விஞ்ஞான பீடத்தின் அருகே உள்ள கன்சைட் எனும் நிலத்தடி சிறைக் கூட்டில் அடைக்கப்பட்டுள்ளனர்.கொமாண்டர் ரணசிங்க சுமித் ரணசிங்க என்பவரின் கீழ் இருந்த அந்த சிறையில் சட்ட விரோதமாக மனித உரிமைகள் மீறப்படும் வண்ணம் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் கடந்த 2008 ஆகஸ்ட் 9ம் திகதி 38/28 ரட்ணம் வீதி கொட்டாஞ்சேனை எனும் முகவரியைச் சேர்ந்த கஸ்தூரி ஆராச்சிகே ஜோன் ரீட் கடத்தப்பட்ட போது அவரது 56 - 5536 எனும் டொல்பின் ரக வானும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. இந்த வேனானது கடற்படை இலக்கத்தகட்டுடன் 6021 எனும் இலக்கத்தின் கீழ் திருகோணமலை கடற்படை முகாமில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனை புலனாய்வுப் பிரிவினர் கடந்த 2015 நவம்பர் 18 ஆம் திகதி கைப்பற்றினர்.. தற்போது அந்த வேன் திருகோணமலை குற்றப் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் உள்ளது.இந்த வாகனத்தின் கதவுகள் வெலிசறை கடற்படை முகாமின் உளவுப் பிரிவுக்குச் சொந்தமான இரகசிய அறை ஒன்றில் இருப்பதாக மேலதிக விசாரணைகளில் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நீதிமன்ற உத்தரவைப் பெற்று அங்கு தேடுதல் நடத்தினர்.
2016 பெப்ரவரி 11 ஆம் திகதி நாம் செய்த சோதனையில் 72 துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட வாகனம் மீட்கப்பட்டது. அத்துடன் அந்த அறையில் சீ.ஜீ 125 ஈ - 1810450 எனும் எஞ்சின் இலக்கத்தைக் கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. 37 ஆவது துண்டில் இருந்து வான் ஒன்றின் செஸி இலக்கம் இரசாயனப் பகுப்பாய்வு மூலம் கண்டறியப்பட்டது. அதுவே காணாமல் போன வடிவேல் லோகநாதன் என்பவருக்கு உரியது என்பது அப்போதே தெரிய வந்தது.
இதனையடுத்தே கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் இருந்த லோகநாதன் மற்றும் அவருடன் வேனில் வெல்லம்பிட்டி நோக்கிப் பயணிக்கும் போது காணாமல் போன ரத்னசாமி ஆகியோர் தொடர்பிலான விசாரணைகளை புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்தனர்.
இதன் போது பரமாநந்தன் பயன்படுத்திய தொலைபேசியில் 0773952046 எனும் இலக்க சிம் அட்டை உட்செலுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளமை எமி இலக்கம் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கையடக்கத் தொலைபேசியானது பஸ் ஒன்றில் விழுந்து கிடந்ததாககூறி கடற்படை வீரர் ஒருவரினால் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் கையளிக்கப்பட்டுள்ளது. அதனை இவ்வாறு வேறு இலக்கத்தில் பயன்படுத்தியவர் தற்போதையை லெப்டி
னன் கொமாண்டர் தயாநந்த என்பது எமது விசாரணைகளில் தெரியவந்தது.
அதற்கு மேல் அந்த விசாரணை இடம்பெறாது அவை மூடி மறைக் கப்பட்டுள்ளன என்பது புலனாய்வுப் பிரிவி னரால் கண்டறியப்பட்டமை குறிப்பிட த்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்