கொழும்பில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞன் - 20 இலட்சம் ரூபாய் கப்பம் கேட்டு கடத்தியவர்கள் மிரட்டல்
யாழ்ப்பாணம் - கொழும்பு தனியார் பேருந்து சாரதியை கடத்திய ஆயுத குழுவொன்று அவரை இரண்டு நாட்கள் தடுத்து வைத்திருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரியின் பாதுகாப்புடன் இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த சாரதி கொழும்பு, கொச்சிகடை பகுதியிலுள்ள வீட்டில் இரு நாட்கள் முழுவதும் தடுத்து வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரிடம் 20 இலட்சம் ரூபாய் கப்பம் கோரியுள்ளனர். பின்னர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட சாரதி விடுவிக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவை சேர்ந்த 28 வயதான எலிஸ்டன் விமல் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
குறித்த சாரதி தடுத்து வைக்கப்பட்டிருந்த அறையில் மேலும் இரண்டு இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக எலிஸ்டன் தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞர்களிடம் கப்பம் கோரப்பட்டுள்ளதாவும், குறித்த பணத்தை பிரித்தானியாவிலுள்ள அவர்களின் உறவினர்களிடம் கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு கொழும்பு பொலிஸ் பொறுப்பதிகாரி வருவதாகவும், அங்கு அவர் மதுபானம் அருந்திவிட்டு செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
தன்னை கடத்திய குழுவுடன் அந்த பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும், கொழும்பை சேர்ந்த பல பொலிஸ் அதிகாரிகளுக்கு தொடர்பிருந்ததாகவும் அந்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த 28ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் ஆமார் வீதி விகாரைக்கு அருகில் நான் கடத்தப்பட்டேன். அந்த சந்தர்ப்பத்தில் நான் யாழ்ப்பாணம் - கொழும்பு பேருந்திற்கு பயணிகளை ஏற்றி கொண்டிருந்தேன். அதன் போது காரில் வந்த 4 பேரும் முச்சக்கர வண்டியில் வந்த 6 பேரும் பேருந்திற்கு பின்னால் வந்தார்கள்.
அவர்களின் கையில் பெரிய கத்தி, இரும்பு மற்றும் சங்கிலிகள் காணப்பட்டன. பேருந்தை நிறுத்தி என்னை இழுத்து சென்றார்கள். காரில் கொச்சிக்கடைக்கு பள்ளி வீதிக்கு அருகில் உள்ள வீட்டிற்கு என்னை அழைத்து சென்றார்கள். அங்கு கிட்டத்தட்ட 25 இளைஞர்கள் இருந்தனர். அவர்கள் நன்கு குடித்துவிட்டு ஆடல் பாடல் ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்த ஒருவர் இருப்பினால் என்னை தாக்கினார். அப்போது எனது தலையில் காயம் ஏற்பட்டது.
இவர்கள் என்னை கடத்தியுள்ளார்கள் என்பது எனக்கு ஆரம்பத்தில் தெரியாது. பின்னரே அறிந்து கொண்டேன். இந்த குழுவினர் ஏஜன்சி ஒன்றை நடத்துகின்றனர். இந்த நபர்கள் எனது அக்காவை பிரான்சிற்கு அனுப்பும் நடவடிக்கைகளை பொறுப்பெடுத்துள்ளனர். 30 இலட்சம் ரூபாய் ஒப்பந்தம் செய்து கொண்டே எனது அக்காவை பிரான்சிற்கு அழைத்து செல்லும் ஆயத்தமாகியுள்ளனர். இதற்காக ஆரம்ப பணத்தை இந்த குழுவினர் பெற்றுள்ளனர்.
பிரான்சிற்கு செல்லும் போது இத்தாலி விமான நிலையத்தில் அக்கா கைது செய்யப்பட்டார். இவை அனைத்து நீண்ட காலங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம். எனது அக்கா வழங்க வேண்டிய பணத்தின் மிகுதி தொகையை பெற்று கொள்வதற்காகவே என்னை கடத்தியுள்ளனர். நான் அவர்களுக்கு 20 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என கூறி ஆவணங்களில் கையொப்பம பெற்றனர். எனது காலை வெட்டுவதற்கு ஆயத்தமாகிய 29ஆம் திகதியே பொலிஸ் பொறுப்பதிகாரி மது அருந்திவிட்டு சென்றார் என அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இளைஞனின் பெற்றோர் வவுனியாவில் வசிக்கின்றனர். சகோதரி ஒருவர் பிரான்சில் கணவரோடு வாழ்ந்து வருகின்றார். விமலை விடுவிப்பதற்காக பிரான்சில் உள்ள சகோதரியிடமே கப்பமாக பணம் கோரியுள்ளனர்.
வவுனியாவில் உள்ள தாயாரிடம் இது தொடர்பில் அறிவித்தவுடன் அவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அதனை தொடர்ந்து இரவு 8.30 அளவில் ஹெட்டியாவத்தை சந்தியில் அவரை விடுவித்துள்ளனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்